கர்நாடக வியாபாரியிடம் ரூ.8½ லட்சம் பறிமுதல்
கூடலூரில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.8½ லட்சத்தை கர்நாடக வியாபாரியிடம் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லைகள் இருக்கின்றன. இங்கு 3 மாநில வியாபாரிகளின் பழக்கமும் உள்ளது.
இந்த நிலையில் கூடலூர்- கேரள எல்லையான நாடுகாணி சோதனைச்சாவடியில் பறக்கும் படை அதிகாரி சுப்பிரமணி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரளாவில் இருந்து வந்த காரை சோதனையிட்டனர். அதில் ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்து 550 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் காரை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்த வியாபாரியான கணேஷிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கேரள வியாபாரிகளிடம் கொள்ளு விற்றுவிட்டு, அதில் வசூலான பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்வதாக கூறினார். எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பின்னர் ஆர்.டி.ஓ. ராஜ்குமாரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோன்று ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் ஒரு காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது சரஸ்வதி என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.80 ஆயிரம் இருந்தது. அதனை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றபோது, அந்த பெண் உறவினரின் திருமண செலவுக்காக கொண்டு செல்கிறேன் என்றார்.
ஆனால் மேற்கொண்டு விசாரித்தபோது திருமணம் முடிந்து பல நாட்களாவது தெரியவந்தது. பின்னர் அந்த பெண் பணத்தை பறிமுதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் உள்ள கட்டப்பெட்டு பகுதியில் குன்னூர் அருகே ஓட்டுப்பட்டரையில் உள்ள வசம்பள்ளத்தை சேர்ந்த பிரபு(வயது 33) என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.52 ஆயிரம் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், குன்னூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
நேற்று முன்தினம் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் ரூ.80 ஆயிரம், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 200, கூடலூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்து 550 என மொத்தம் ரூ.10 லட்சத்து 64 ஆயிரத்து 750 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரியில் இதுவரை ரூ.1 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் ரூ.95 லட்சத்து 74 ஆயிரம் ஆவணங்களை காட்டியதால் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க சரக்கு வாகனங்கள், ஆம்புலன்சுகளில் சோதனை நடத்த வேண்டும். ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்தால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து அவர்கள் தாமதிக்க வைக்காமல் ஆம்புலன்ஸ், சரக்கு வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story