மூங்கில் அரிசிகளை சேகரித்த பணியாளர்கள் - அதிகாரிகள் எச்சரிக்கை


மூங்கில் அரிசிகளை சேகரித்த பணியாளர்கள் - அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 March 2021 9:19 PM IST (Updated: 16 March 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

ஊரக வேலை திட்ட பணிகளை மேற்கொள்ளாமல் மூங்கில் அரிசிகளை சேகரித்த பணியாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

கூடலூர்,

கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட முதுமலை ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. 

தற்போது ஊராட்சிக்கு உட்பட்ட முதுகுளி பகுதியில் விவசாய வேலையில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மேற்கண்ட திட்டத்தின் கீழ் சரிவர பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்று கூடலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் தலைமையிலான அலுவலர்கள் முதுகுளி பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது ஊரக வேலை திட்ட பணிகளை பார்வையிட்டனர். அப்போது குறைந்த அளவு பணியாளர்கள் மட்டுமே அங்கு இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். அப்போது அங்குள்ள வனப்பகுதியில் வயது முதிர்ச்சி காரணமாக மூங்கில்களில் அரிசி விளைந்து இருந்தது. மேலும் அதில் இருந்து உதிர்ந்து கிடந்த அரிசிகளை ஊரக வேலை திட்ட பயனாளிகள் சேகரித்துக்கொண்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது ஊரக வேலை திட்ட பணிகளை மேற்கொள்ளாமல் மூங்கில் அரிசியை சேகரித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விதிமுறைகளை மீறி பணியாற்றிய பணியாளர்களை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் எச்சரித்தனர். இனி வரும் நாட்களில் தவறுகள் தொடர்ந்து நடைபெறுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story