தேனியில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
தேனியில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
தேனி:
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் ராமராஜ். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 25). இவர் செல்போன் கடை நடத்தி வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் தேனி புறவழிச்சாலையில் கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ராஜ்குமார் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்தது. வழக்கில் ராஜ்குமாரின் தந்தை ராமராஜ், தாய் புஷ்பராணி ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூ.15 லட்சத்து 15 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், உரிய காலத்தில் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.
இதனால், ராமராஜ் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். அதன்பேரில், அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ராமராஜ், அவருடைய மனைவி புஷ்பராணி மற்றும் அவர்கள் தரப்பு வக்கீல் செந்தில்குமார், கோர்ட்டு பணியாளர்கள் ஆகியோர் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்துக்கு நேற்று வந்தனர். அப்போது அங்கிருந்து திருச்சி புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சை அவர்கள் ஜப்தி செய்தனர்.
மேலும் அந்த பஸ்சில், ஜப்தி செய்யப்பட்டது தொடர்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பின்னர் அந்த பஸ் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
Related Tags :
Next Story