விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 136 வங்கி கிளைகளில் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்றும் 2-வது நாளாக இவர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள வங்கிகள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன. ஒரு சில வங்கிகள் அதிகாரிகள், ஊழியர்கள் யாருமின்றி பூட்டிக்கிடந்தன. 2 நாட்கள் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தினால் வங்கி சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கின.
அதுபோல் ரூ.600 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதோடு ஏ.டி.எம். சேவையும் முடங்கியதால் அனைத்து தரப்பு பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஒருங்கிணைப்பாளர் மோகன், நிர்வாகிகள் ரவிக்குமார், ரமேஷ், சிவக்குமார், ஜெயச்சந்திரன், இளையராஜா, சாமிநாதன், சுந்தர்ராஜ், ராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story