ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளால் கொரோனா தொற்று பரவும் அபாயம்


ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளால் கொரோனா தொற்று பரவும் அபாயம்
x
தினத்தந்தி 16 March 2021 11:37 PM IST (Updated: 16 March 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

முக கவசம் அணியாததால் வெளிமாநிலங்களில் இருந்து ராமேசுவரம் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மூலம் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி முதல் முதல்முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்து வந்தது. பிறகு கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் குறைய தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அதுபோல் கடந்த டிசம்பர் மாதம் முதல் அனைத்து சுற்றுலா இடங்களும் திறக்கப்பட்டன.

மீண்டும் பரவல்

இந்தநிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 895 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வரும் நிலையில் ராமேசுவரம் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. இதேபோல் தனுஷ்கோடி பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து காணப்படுவதால் கடற்கரை மற்றும் தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலையும் சுற்றுலாப்பயணிகள் குறைந்த அளவில் காணப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன.

அதுபோல் ராமேசுவரம் தனுஷ்கோடி அக்னி தீர்த்த கடற்கரை, ராமர் பாதம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் முக கவசங்கள் யாரும் அணிவது கிடையாது. சமூக இடைவெளி உள்ளிட்ட எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவது கிடையாது.

கோரிக்கை

இதனால் வெளிமாநிலங்களில் இருந்து ராமேசுவரம் பகுதிக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மூலம் கொரோனா பரவல் அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து செல்லும் ராமேசுவரம் பகுதியில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிவது கண்டிப்பாக அமல்படுத்தவும், அதுபோல் சுற்றுலா இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றவும் மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story