யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆண் யானை சாவு


யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆண் யானை சாவு
x
தினத்தந்தி 17 March 2021 12:08 AM IST (Updated: 17 March 2021 12:12 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆண் யானை உயிரிழந்தது. கோவை அருகே குட்டி யானை இறந்தது.

கோவை,

வால்பாறை வனச்சரக பகுதிக்குட்பட்ட கவர்க்கல் சரகத்தில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அவர்கள் அங்குள்ள கவர்க்கல் பள்ளம் அருகே சென்றபோது அங்கு ஒரு யானை இறந்துகிடந்தது.  

உடனே இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

பின்னர் அவர்கள் அங்கு கிடந்த யானையின் உடலை ஆய்வு செய்தனர். 

மோதலில் யானை சாவு 

அதில் இறந்து கிடந்தது 45 வயதான ஆண் காட்டு யானை என்பதும், அதன் உடலில் தந்தத்தால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. எனவே யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்ததில் இறந்தது தெரியவந்தது. 

யானை இறந்து கிடந்தது அடர்ந்த வனப்பகுதி என்பதால், அதன் உடல் மற்ற வனவிலங்குகளுக்கு இரையாக விடப்பட்டது. 

குட்டி யானை பலி 

அதுபோன்று கோவை அருகே உள்ள போளுவாம்பட்டி வனச்சரகம் கெம்பனூர் வனப்பகுதிக்குள் குட்டியானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. 

உடனே வனத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது உடல் அழுகிய நிலையில் இருந்தது. 

உயிரிழந்தது 3 வயதான பெண் குட்டி யானை ஆகும். உயரமான பகுதியில் இருந்து விழுந்ததால் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த குட்டியானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 


Next Story