மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிப்பது எப்படி?
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிப்பது எப்படி?
சிவகங்கை
சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்களிப்பது எப்படி என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
தபால் வாக்கு
சிவகங்கை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது நோய்த்தொற்று இருக்கலாம் என யூகத்திற்கு உரிய வாக்காளர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்குமுறையில் வாக்களிக்கும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் அளித்துள்ளது.
தபால் ஓட்டுப்பெற தகுதியான மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது நோய்த்தொற்று இருக்கலாம் என யூகத்திற்கு உரிய வாக்காளர்களின் வீடுகளுக்கு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் சென்று தபால் வாக்கு கோரும் விண்ணப்பங்களை அளிப்பார்கள்.
விண்ணப்ப படிவம்
அவர்கள் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவதுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பெற்றுக் கொள்வார்கள். எனவே 3 வகையான வாக்காளர்கள் தபால் வாக்களிக்க விருப்பம் கோரும் விண்ணப்ப படிவத்துடன் தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான ஆவணங்கள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆவணங்கள் முறையே சம்பந்தப்பட்ட வாக்காளர்களால் சமர்ப்பிக்க வேண்டும்.
உரியகாலத்திற்குள் மற்றும் உரியமுறையில் பெறப்பட்ட தபால் ஓட்டிற்கான விண்ணப்பங்கள் முறையாக இருக்கும்பட்சத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு அவை சரியாக இருக்குமாயின், அவ்வாக்காளர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்படும். தபால் ஓட்டுகளை பெறுவதற்கான வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் குழு, செல்ல இருக்கும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை தொலைபேசி மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அவர்களுக்கு தெரிவிப்பார்கள். அவ்வாறு தபால் ஓட்டு பெறுவதற்காக அதிகாரிகள் வரும்போது மேற்படி ஓட்டளிப்பதை பார்வையிட தகுதியான ஒருவரை வாக்காளர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
வீடியோ பதிவு
தபால் ஓட்டுகளை பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு, வாக்காளார்களுக்கு வாக்குப்பதிவு செய்யும் வழிமுறையை தெளிவுபடுத்துவார்கள். வாக்காளர்கள், எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் ஆட்படாமல் சுயமாக அவர்களது தேர்விற்குரிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் கொண்ட குழுவோடு ஒரு நுண் பார்வையாளரும் செல்வர்.
தபால் ஓட்டளிக்கும் நிகழ்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு வீடியோ பதிவு செய்யும் போது ரகசிய வாக்குமுறை கடைபிடிப்பதை மீறாமல் பதிவு செய்ய வேண்டும். வாக்குப்பதிவு செய்ய வரும் குழுவின் வருகையின் போது வாக்காளர் வீட்டில் இல்லையெனில், முன்கூட்டியே தகவல் அளித்து இரண்டாவது முறையும் வருகை தருவார். அதிகாரிகளது இரண்டாவது வருகையின் போதும் வாக்காளர் வீட்டில் இல்லையெனில் மீண்டும் வருகை தரமாட்டார்கள். தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்ட மேற்கண்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story