குன்னம் தொகுதியில் 2 பேர் வேட்புமனு தாக்கல்


குன்னம் தொகுதியில் 2 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 17 March 2021 1:21 AM IST (Updated: 17 March 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் தொகுதியில் நேற்று 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள 4 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் நாளில் குன்னம் தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். நேற்று முன்தினம் பெரம்பலூர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால் நேற்று பெரம்பலூர் தொகுதியில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் பெரம்பலூர் உதவி கலெக்டர் அலுவலகமும், பெரம்பலூர் தாசில்தார் அலுவலகமும் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று பெரம்பலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தி.மு.க.வின் மாற்று வேட்பாளர், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் ஆகிய 3 பேரின் பெயர்களில் வேட்பு மனுக்கள் வாங்கி செல்லப்பட்டுள்ளது.
4 பேர் வேட்பு மனு
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் அருள், தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ராவணன் ஆகியோர் நேற்று குன்னம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதன்படி குன்னம் தொகுதியில் இதுவரை 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் தொகுதியில் நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஜெயங்கொண்டம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளர் அன்பழகி மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் என 2 பேர் நேற்று உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை ஜெயங்கொண்டம் தொகுதியில் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Next Story