களக்காடு அருகே 3 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி


களக்காடு அருகே 3 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 16 March 2021 8:45 PM (Updated: 16 March 2021 8:45 PM)
t-max-icont-min-icon

களக்காடு அருகே 3 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றது.

களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மேலகாலனி தெற்கு தெருவை சேர்ந்தவர் மூதாட்டி செல்வம் (வயது 65). இவரது கணவர் ஜெயபால் இறந்து விட்டதால் தனியாக வசித்து வருகிறார். மேலும் இவர் 7 ஆடுகள் வளர்த்து அவைகளை பராமரித்து வருகிறார். பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று விட்டு, இரவில் வீட்டு பின்புறம் உள்ள தோட்டத்தில் கட்டிப் போடுவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல் ஆடுகளை தோட்டத்தில் கட்டிப் போட்டிருந்தார். இரவு 2 மணியளவில் தோட்டத்தில் இருந்து சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து செல்வம் எழுந்து தோட்டத்திற்கு சென்றபோது சிறுத்தைப்புலி தோட்டத்தில் இருந்து வெளியே பாய்ந்து ஓடியது.
ஆடுகளை கடித்துக் கொன்றது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி செல்வம், தோட்டத்திற்குள் சென்று பார்த்தபோது 3 ஆடுகள் காயங்களுடன் இறந்து கிடந்தன. தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலி 3 ஆடுகளை கடித்துக் கொன்றுள்ளது. 4-வது ஆட்டை கடித்தபோது மூதாட்டி வந்ததால் சிறுத்தைப்புலி வெளியே பாய்ந்து ஓடியது தெரியவந்தது.

இதுபற்றி களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின் பேரில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று அங்கு பதிந்திருந்த சிறுத்தைப்புலியின் கால்தடங்களை ஆய்வு செய்தனர்.

சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும், சிறுத்தைப்புலி கடித்துக்கொன்ற ஆடுகளுக்கு வனத்துறையினர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊருக்குள் சிறுத்தைப்புலி புகுந்து ஆடுகளை கடித்துக் கொன்றது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story