முகக் கவசம் அணியாத ரெயில்வே பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
முகக் கவசம் அணியாத ரெயில்வே பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
மதுரை, மார்ச்
ரெயில்வே பணியாளர்கள் முகக்கவசம் அணியாமல் பணிக்கு வந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரெயில்வே பொதுமேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை
கொரோனா நோய் தொற்றின் தாக்கம் தற்போது மீண்டும் நாடு முழுவதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து, ரெயில்வே துறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கடந்த வாரம் வெளியிட்ட சுற்றறிக்கையில், “தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட மேலாளர் அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட ரெயில் நிலையங்களில் பணியாற்றுபவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
அலுவலக பணிக்காக வெளியில் இருந்து வரும் நபர்கள் யாராக இருப்பினும் அவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். அலுவலக பணியாளர்கள் முகக்கவசம் அணியாமல் பணிக்கு வந்தால், முதலில் எச்சரிக்கையும் அடுத்த முறை பணிப்பதிவேட்டில் ஒழுங்கு நடவடிக்கைக்கும் அதிகாரிகள் பரிந்துரைக்க வேண்டும்.
போதிய சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். கைகளை அவ்வப்போது சோப்பு போட்டு கழுவியும், கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தப்படுத்தவும் வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முகக்கவசம் வினியோகம்
இது குறித்து, டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தின் மதுரை கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ரெயில்வே நிர்வாகம் தரப்பில் என்.95 முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி திரவம் வினியோகம் செய்ய வேண்டும். குறிப்பாக, ரெயில்வே பணிமனைகளில் வேலைபார்ப்பவர்களுக்கும், ரெயில்களில், ரெயில் நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கும் இவற்றை வினியோகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story