எவ்வித அறிகுறியும் இன்றி பரவும் கொரோனா வைரஸ் தொற்று- மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு தகவல்
முக கவசம் அணிவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம் என்றும், எவ்வித அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் பரவி வருவதாக மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு தெரிவித்தார்.
திருச்சி,
முக கவசம் அணிவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம் என்றும், எவ்வித அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் பரவி வருவதாக மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு தெரிவித்தார்.
அவசர ஆலோசனை
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் வனிதா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் சென்னை மருத்துவ கல்வி இயக்கக இயக்குனர் டாக்டர் நாராயணபாபு கலந்து கொண்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
அறிகுறி இன்றி பரவும் கொரோனா
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 200 முதல் 250 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8,267 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருச்சி சேதுராப்பட்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 237 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் 14 மாணவர்கள், ஒரு பேராசிரியர் என மொத்தம் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவல் எவ்வித அறிகுறியும் இன்றி பரவியுள்ளது. தற்போது திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தொற்றால் பாதிக்கப்பட்டு 36 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முக கவசம் கட்டாயம்
அவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்களுக்கு வீரியம் இல்லாத கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடுகையில் கொரோனா தாக்கம் குறைவாகவேதான் உள்ளது. இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.
ஆனாலும் கொரோனா தடுப்பூசி அனைவரும் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். அதே வேளையில் முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் அவசியமாகும்.
இவ்வாறு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு தெரிவித்தார்.
Related Tags :
Next Story