சேலம் கந்தம்பட்டியில் பறக்கும் படை சோதனையில் ரூ.1¾ லட்சம் பறிமுதல்


சேலம் கந்தம்பட்டியில் பறக்கும் படை சோதனையில் ரூ.1¾ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 17 March 2021 3:10 AM IST (Updated: 17 March 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கந்தம்பட்டியில் காரில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 200-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சேலம்:
சேலம் கந்தம்பட்டியில் காரில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 200-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தீவிர சோதனை
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் உள்ளிட்ட பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட கந்தம்பட்டி அருகே பறக்கும்படை அலுவலர் தனசேகர் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ரூ.1¾ லட்சம் பறிமுதல்
அப்போது காரில் இருந்த சேலத்தை சேர்ந்த சந்திரதாசன் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 200 வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்துக்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகங்காதரனிடம் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் நேற்று காலை வரை உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.38 லட்சத்து 40 ஆயிரமும், ரூ.36 கோடியே 77 லட்சம் மதிப்பிலான தங்கமும், ரூ.41 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான 89.58 கிலோ வெள்ளி பொருட்களும், 90 சேலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருப்பி கொடுக்கப்பட்டன
இதில் உரிய ஆவணங்கள் கொடுத்த பின்னர் அவற்றை விடுவிக்கும் குழுவினர் சரிபார்த்து இதுவரை ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான 4.850 கிலோ வெள்ளி பொருட்களும், ரூ.4 லட்சத்து 99 ஆயிரமும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராமன் தெரிவித்துள்ளார்.


Next Story