வாசுதேவநல்லூர் தொகுதி கண்ணோட்டம்


வாசுதேவநல்லூர் தொகுதி கண்ணோட்டம்
x
தினத்தந்தி 17 March 2021 4:03 AM IST (Updated: 17 March 2021 4:03 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிதாக உதயமான தென்காசி மாவட்டத்தில் அடங்கி உள்ள வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி தனி தொகுதி ஆகும்

வாசுதேவநல்லூர்:
நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிதாக உதயமான தென்காசி மாவட்டத்தில் அடங்கி உள்ள வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி தனி தொகுதி ஆகும். இந்த தொகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. 

அதிக கிராமங்கள்

இங்கு பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். நெல், கரும்பு, வாழை, எலுமிச்சை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. மேலும் பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்கள். இந்த தொகுதி அதிக கிராமங்களை உள்ளடக்கியது. 

இங்கு 1 லட்சத்து 18 ஆயிரத்து 227 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 22 ஆயிரத்து 101 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 39 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 367 வாக்காளர்கள் உள்ளனர். 

வெற்றி விவரம்

இந்த தொகுதி நெல்லை மாவட்டத்தில் இருந்து இதுவரை 12 தேர்தலை சந்தித்து உள்ளது. தென்காசி மாவட்டம் உதயமான பிறகு முதல் முறையாக தற்போது தேர்தலை சந்திக்கிறது. இதுவரை நடந்த 12 தேர்தல்களில் பல கட்சிகளுக்கும் வெற்றியை பகிர்ந்தளித்து உள்ளது.

இந்த தொகுதியில் அ.தி.மு.க. 2 முறையும் (2011, 2016), தி.மு.க. 2 முறையும் (1967, 1971), காங்கிரஸ் 3 முறையும் (1984, 1989, 1991), தமிழ் மாநில காங்கிரஸ் 2 முறையும் (1996, 2001), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 முறையும் (1977, 1980), ம.தி.மு.க. ஒரு முறையும் (2006) வெற்றி பெற்று உள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மனோகரன் 73 ஆயிரத்து 904 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து புதிய தமிழகம் சார்பில் போட்டியிட்ட அன்பழகன் 55 ஆயிரத்து 146 ஓட்டுகள் பெற்றார்.

செண்பகவல்லி அணைக்கட்டு

இந்த தொகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்கள் விவசாயம் செய்வதற்கு தேவையான தண்ணீர் கிடைக்க செண்பகவல்லி அணைக்கட்டை சீரமைத்து அங்கிருந்து பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வானமலையாறு நீர்த்தேக்கம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயம் செழிக்கும். குடிநீர் பிரச்சினை தீரும். 

இந்த தொகுதியில் உள்ள புளியங்குடி பகுதியில் எலுமிச்சை பழங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து எலுமிச்சை பழங்கள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிக விளைச்சல் உள்ள காலங்களில் விலை குறைந்து காணப்படுகிறது. எனவே, எலுமிச்சை பழங்களை பாதுகாத்து நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்யும் வகையில் எலுமிச்சைக்கு என்று பிரத்யேக குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். எலுமிச்சை பழத்தில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். இங்கு கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகிறது. எனவே, கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அமைக்கப்பட உள்ள நான்கு வழிச்சாலையை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர் இந்த தொகுதி மக்கள். 

வாசுதேவநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மனோகரன் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் சதன் திருமலைகுமார் களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மதிவாணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த தொகுதியில் இந்த முறை வெல்லப்போவது யார்? என்பது வருகிற மே மாதம் 2-ந் தேதி தெரியவரும்.

Next Story