வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தை காப்பாற்ற தி.மு.க.வுக்கு வாய்ப்பு தாருங்கள் நாமக்கல் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தை காப்பாற்ற தி.மு.க.வுக்கு வாய்ப்பு தாருங்கள் நாமக்கல் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 17 March 2021 8:12 AM IST (Updated: 17 March 2021 8:12 AM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தை காப்பாற்ற தி.மு.க.வுக்கு வாய்ப்பு தாருங்கள் நாமக்கல் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாமக்கல்:
வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தை காப்பாற்ற தி.மு.க.வுக்கு வாய்ப்பு தாருங்கள் என நாமக்கல் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ராமலிங்கம் (நாமக்கல்), கே.எஸ்.மூர்த்தி (பரமத்திவேலூர்), மதிவேந்தன் (ராசிபுரம்), பொன்னுசாமி (சேந்தமங்கலம்) மற்றும் கொ.ம.தே.க. வேட்பாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு) ஆகியோரை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டு காலமாக பாழ்பட்டு போய் உள்ள தமிழகத்தை காப்பாற்றுவதற்கு வருகிற சட்டசபை தேர்தலில் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி வரும் முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு இந்த தேர்தலில் தோல்வியை மட்டுமல்ல, அரசியலை விட்டு ஓட ஓட விரட்ட அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். தமிழக அமைச்சர்களின் ஊழலை ஆதாரங்களுடன் பட்டியல் போட்டு, ஏற்கனவே கவர்னரிடம் நாங்கள் மனு அளித்து உள்ளோம். சில பிரச்சினைகளை நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்று உள்ளோம்.
மின்மிகை மாநிலம்
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். மின்வாரியத்தில் ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் சார்பில் எழுப்பப்பட்ட புகாருக்கு அமைச்சர் தரப்பில் இருந்து மறுப்போ, விளக்கமோ இதுவரை வழங்கப்படவில்லை. கொரோனா காலத்தில் முககவசம், பிளீச்சிங் பவுடர் மற்றும் துடைப்பங்களை வாங்கியதில் கூட இந்த ஆட்சி ஊழல் செய்தது.
அமைச்சர் தங்கமணி சட்டசபை, மக்கள் மன்றம் மற்றும் தேர்தல் பிரசாரங்களின்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக விளங்குவதாக தவறான புள்ளி விவரத்தை சொல்கிறார். ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, அந்த மாநிலத்தின் பயன்பாட்டுக்கு போக பிற மாநிலங்களுக்கு தந்தால் மட்டுமே அதை மின் மிகை மாநிலம் என கூறலாம்.
ஆனால் தற்போதைய ஆட்சியில் பிற மாநிலங்களில் இருந்தும், தனியாரிடம் இருந்தும் மின்சாரம் விலைக்கு வாங்கப்படுகிறது. ஏனென்றால் அதில் தான் லஞ்சம் வாங்கி ஊழல் செய்ய முடியும். எனவே அவர்களை (ஆட்சியர்களை) வீட்டுக்கு மட்டுமல்ல, சிறைக்கு அனுப்பும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய உள்ளது.
மின்சார கட்டணம்
அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதம் ஒருமுறை மின்சார கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் முன்னதாகவே சொல்லி இருந்தோம். மேலும் திருச்சி மாநாட்டில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்தோம். அடுத்த நாளே முதல்-அமைச்சர் பழனிசாமி பெண்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என அறிவித்தார். ஒவ்வொரு நாளும் ஸ்டாலின் என்ன சொல்வார் என முதல்-அமைச்சர் பழனிசாமி பார்த்து கொண்டு இருக்கிறார்.
அதனால் தான் 10 ஆண்டுகளாக இல்லாமல் இப்போது இவற்றை அறிவிக்கிறார். கடந்த பொங்கல் பண்டிகையின்போது கூட்டுறவு சங்கங்களில் உள்ள விவசாயக்கடன் ரத்து செய்யப்படும் என நான் அறிவித்தேன். ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் விவசாயக்கடன் ரத்து செய்யப்பட்டதை கருத்தில் கொண்டு தான், அதை நான் அறிவித்தேன். அதையே பழனிசாமியும் அறிவித்தார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்து விட்டது. எனவே நாளை ஹெலிகாப்டர் வழங்கப்படும் என கூட முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்தாலும் அறிவிப்பார். அதுதான் இன்றைய நிலையாக உள்ளது.
ஏப்ரல் 6-ந் தேதி விடை கிடைக்கும்
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். கொரோனா கால நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்பட தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகள் வழங்கப்பட்டு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை, அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய திட்டமிட்டு மறுத்தவர் முதல்-அமைச்சர் பழனிசாமி. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கலாமா? இந்த கேள்விக்கு வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி விடை கிடைக்கப்போகிறது. அன்றைக்கு அனைவரும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரி வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். இங்கு கூடி உள்ள கூட்டத்தை பார்க்கும் போது தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை
உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கதாயுதம் பரிசு
முன்னதாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பட்டாச்சாரியார்கள் மு.க.ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதையுடன் கதாயுதம் பரிசாக வழங்கினர்.
இந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், முன்னாள் மத்திய இணை மந்திரி காந்திசெல்வன், சின்ராஜ் எம்.பி., மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
=========

Next Story