முககவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்
முககவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம்,
முககவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனைக்கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-
தமிழகத்தின் அருகாமை மாநிலங்களில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகஅளவில் பரவி வருகிறது. அதன்அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் சார்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 15,415 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 3000 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுஉள்ளன.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதில் அனைத்துத் துறை சார்ந்த அரசு அலுவலர்களும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.
விழிப்புணர்வு
பொதுமக்களுக்கு கட்டாயம் முககவசம் அணிதல், சமூக இடை வெளியை கடைபிடித்தல், சோப்பு கொண்டு கைகழுவுதல் அல்லது சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைவீதிகள், வாரச்சந்தைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தேநீர் கடைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்துகள் போன்ற பொது இடங்களில் பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமல் இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது.
அபராதம்
இது மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகுக்கும். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இத்தகைய சூழ்நிலைகளை தடுக்க, பொது இடங்களில் எச்சில் துப்புவோர், முககவசம் அணியாதோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோருக்கு தனிநபர் அபராதமாக ரூ.200-ம், கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத கடைகள், திருமண மண்ட பங்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற வனிக நிறுவனங்களுக்கு தலா ரூ.5000-ம் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தெடர்பாக அரசு அறிவிக்கும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத தனிநபர், நிறுவனங்கள் மீது சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை சார்ந்த அலுவலர்களுக்கு அரசு விதிகளுக்கு உட்பட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒத்துழைப்பு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் இவ்வாறு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி சிவகாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசிங், முதன்மை கல்வி அதிகாரி சத்தியமூர்த்தி, சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் பரமக்குடி இந்திரா, ராமநாதபுரம் பொற்கொடி, ஊராட்சி உதவி இயக்குனர் கேசவதாசன், பேரூராட்சி உதவி இயக்குனர் மாடசாமி பாண்டியன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story