தி.மு.க., அ.ம.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல்


தி.மு.க., அ.ம.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல்
x
தினத்தந்தி 17 March 2021 10:51 PM IST (Updated: 17 March 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க., அ.ம.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல்

மதுரை, மார்ச்.18
மதுரையில் போட்டியில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. நாளை (வெள்ளிக்கிழமை) மனு தாக்கலுக்கான கடைசி நாள் ஆகும். இதையொட்டி அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சையாக போட்டியிடுவோர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மத்திய தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடை சூழ வந்தார்.  பின்னர் அவர் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் அவரது தாயார் மற்றும் மாவட்ட செயலாளர் தளபதி ஆகியோர் சென்றனர்.
தி.மு.க.
மதுரை மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் சின்னம்மா நேற்று மதியம் மேற்கு தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி விஜயாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் விஜயராஜன், முன்னாள் தி.மு.க. மேயர் குழந்தைவேலு ஆகியோர் சென்றனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
மதுரை மத்திய தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பசும்பொன் தேசிய கழக தலைவர் ஜோதி முத்துராமலிங்கம் தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்துக்கு வந்து தேர்தல் அதிகாரி கோட்டூர் சாமியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் கண்ணன், தளபதி மாரியப்பன் ஆகிய 2 பேர் மட்டும் உடன் இருந்தனர்.
அ.ம.மு.க.
மதுரை வடக்கு தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் ஜெயபால் மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி பிரேம்குமாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் அ.ம.மு.க. பகுதி செயலாளர்கள் மதன், ஜெயபாண்டி ஆகியோர் சென்றனர். மதுரை மத்திய தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகி சிக்கந்தர் பாட்சா  மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ரபீக்அகமது, அ.ம.மு.க. பகுதி செயலாளர் சிவஜோதி ஆகியோர் உடன் இருந்தனர்.
இது தவிர, மத்திய தொகுதியில் போட்டியிடும் பகுஜன்சமாஜ் கட்சி வேட்பாளர் தவமணி, மை இந்தியா கட்சி வேட்பாளர் ஈஸ்வரி ஆகியோர் தெற்கு மண்டல அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனர். 

Next Story