தனியார் கல்லூரியில் இறங்கிய ஹெலிகாப்டரில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை
சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இறங்கிய ஹெலிகாப்டரில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சரவணம்பட்டி,
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சோதனையின்போது ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
ஹெலிகாப்டரில் சோதனை
இந்த நிலையில் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்துக்குள் நேற்று காலை 11 மணியளவில் ஒரு ஹெலிகாப்டர் வந்து இறங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த பறக்கும்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அந்த ஹெலிகாப்டருக்குள் சோதனை செய்தனர். அதில் பணம் எதுவும் இல்லை.
தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். அதில் அந்த ஹெலிகாப்டர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்தது தெரியவந்தது.
கோரகுந்தா
மேலும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் உள்பட 2 பேர் கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கோரகுந்தாவுக்கு செல்ல இருப்பதும், ஹெலிகாப்டர் அந்த கல்லூரியில் தரை இறங்க மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்று இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ஹெலிகாப்டரில் பணம் கொண்டு வரப்பட்டதா என்று சோதனை செய்யப்பட்டது. அதில் பணம் எதுவும் இல்லை என்றனர்.
Related Tags :
Next Story