கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 23 பேர் வேட்பு மனுதாக்கல்


கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 23 பேர் வேட்பு மனுதாக்கல்
x
தினத்தந்தி 17 March 2021 11:58 PM IST (Updated: 17 March 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 23 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

கரூர்
வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனையொட்டி கரூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்கள் வேட்புமனுதாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கடந்த 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடந்த 15-ந்தேதி அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் சுயேச்சைகள் வேட்புமனுதாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு வேட்புமனுதாக்கல் தொடங்கியது. 
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரெ.கருப்பையா உள்பட 13 பேர் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் வேட்புமனுதாக்கல் செய்தனர். 
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி சட்டன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மொஞ்சனூர் பி.ஆர்.இளங்கோ அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் தவச்செல்வத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இக்கட்சியினர் மாற்று வேட்பாளராக இ.சுதா வேட்பு மனு தாக்கல் செய்தார். சுயேச்சை வேட்பாளராக அரவக்குறிச்சி அருகே பொண்ணாக்கவுண்டனூரை சேர்ந்த தல் அறிவழகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். 
மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பள்ளப்பட்டியைச்சேர்ந்த கோ.ச. முஹம்மது ஷனீப் ஷகில் தனது இரண்டு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்தார். ஏன் இவ்வாறு வருகிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு காலையில் தான் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டேன் அதற்குள் தீர்ந்து விட்டது. பெட்ரோல் விலை விண்ணைத் தொட்டுள்ளது என்று கூறினார். இதனையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். 
குளித்தலை
குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி சார்பில் மாற்று வேட்பாளர் உள்பட மொத்தம் 4 பேர் தங்கள் வேட்பு மனுவை ஏற்கனவே தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து நேற்று அ.தி.மு.க. வேட்பாளரான என்.ஆர்.சந்திரசேகர் தனது 2-வது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் குளித்தலை அருகே உள்ள பனையூரை சேர்ந்த அக்கட்சியின் குளித்தலை தொகுதி பொதுச் செயலாளரான அன்பழகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அ.ம.மு.க. கட்சி சார்பில் நிரோஷா வெங்கடேஷ் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக்அப்துல்ரகுமானிடம் தாக்கல் செய்தார். 
இதுவரை நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
23 பேர் வேட்புமனு தாக்கல்
கரூர் மாவட்டத்தில் கரூரில் 13 பேரும், அரவக்குறிச்சியில் 4 பேரும், கிருஷ்ணராயபுரத்தில் 3 பேரும், குளித்தலையில் 3 ேபரும் என மொத்தம் 23 பேர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Next Story