ஓசூர் அருகே கார்களில் கொண்டு சென்ற ரூ.2½ லட்சம் பறிமுதல்
ஓசூர் அருகே கார்களில் கொண்டு சென்ற ரூ.2½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சின்ன பேளகொண்டபள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 900 கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பறக்கும் படையினர் வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த ஷாஹின்ஷா (வயது 42) என்பதும், உரிய ஆவணம் இன்றி பணம் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.
பணம் பறிமுதல்
இதேபோல் ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முருகன் தலைமையில் பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.99 ஆயிரத்து 790 கொண்டு சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியபோது அவர், தேன்கனிக்கோட்டை அருகே கோனேரி அக்ரஹாரம் என்ற கிராமத்தை சேர்ந்த நல்லே கவுண்டர் (29) என்பதும், டிராக்டருக்கு டயர் வாங்குவதற்காக பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, ஓசூர் உதவி கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story