அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா


அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா
x
தினத்தந்தி 18 March 2021 12:41 AM IST (Updated: 18 March 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த வகுப்புகளில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் பணியாற்றி வரும் 10-ம் வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே நேற்று சுகாதாரத்துறையினர், அந்த பள்ளிக்கு நேரில் சென்று அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 

தடுப்பூசி

அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியர் வகுப்பெடுத்த 10-ம் வகுப்பில் உள்ள 80 மாணவிகளுக்கு நேற்று முதல் வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வரும் மற்ற வகுப்பு மாணவிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு முக கவசம், சானிடைசர் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் 74 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா தெரிவித்தார்.

Next Story