வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவு


வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவு
x
தினத்தந்தி 18 March 2021 4:17 AM IST (Updated: 18 March 2021 4:17 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

எடப்பாடி:
சேலம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.
அடிப்படை வசதிகள்
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகள், துணை வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு, முன் எச்சரிக்கையாக வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரித்து துணை வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,003 துணை வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 83 துணை வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 403 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதிகாரிகளுக்கு உத்தரவு
வாக்குச்சாவடிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி எடப்பாடி சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் கடைகள், தினசரி சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள், பஸ் பயணிகள் ஆகியோர் முக கவசம் அணிந்து உள்ளார்களா? என்று ஆய்வு நடத்தினார். முக கவசம் அணியாத ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட பலருக்கு முக கவசம் வழங்கினார்.
ஆய்வின் போது எடப்பாடி நகராட்சி ஆணையாளர் பழனியப்பன், மண்டல பொறியாளர் கமலகண்ணன், நகராட்சி பொறியாளர் முருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story