கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோடங்கிபட்டி பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டி தரப்படும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோடங்கிபட்டி பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டி தரப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர்,
கரூர் தொகுதியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து நேற்று கோடங்கிபட்டியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு திரளாக கூடியிருந்த பொதுமக்களிடம் அவர் பேசியதாவது:- கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உங்களுடைய பேராதரவோடு வெற்றி பெற்று, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டேன். கரூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதியாக இருந்தது.
விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதமாக உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது 2 இடங்களில் உயர்மட்ட பாலங்களின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. மிக விரைவிலேயே கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோடங்கிபட்டி பிரிவில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்ற உத்தரவாதத்தை தருகிறேன்.
கோடங்கிபட்டியில் அனைத்து பகுதிகளிலும் தார்ச்சாலைகளும், சிமெண்டு சாலைகளும் அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செயல்படுத்தி உள்ளோம். சட்மன்ற தேர்தலில் பொதுமக்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமாள்பட்டி காலனி, பாறையூர், மட்டப்பாறை, சுக்காலியூர், காமராஜ் நகர், செல்லாண்டிபாளையம், வையாபுரி நகர், ராயனூர்ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குசேகரித்தார். வாக்குசேகரிக்க சென்ற அனைத்து இடங்களிலும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
Related Tags :
Next Story