பொள்ளாச்சியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது


பொள்ளாச்சியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2021 7:05 PM GMT (Updated: 18 March 2021 7:20 PM GMT)

பொள்ளாச்சியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாகன சோதனை

பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் உள்ள பல்வேறு குற்ற வழக்கில் தலைமறைவாக இருக்கும் நபர்களை கைது செய்ய மேற்கு மண்டல ஐ.ஜி. தினகரன் உத்தரவிட்டார். 

இதையடுத்து கோவை சரக டி.ஐ.ஜி. நரேந்திரநாயர், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோரது மேற்பார்வையில் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. 

அவர்கள் உடுமலை ரோடு ஊஞ்சவேலாம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

2 பேரை பிடித்து விசாரணை 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னை சேலையூரை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 37), சிஞ்சு வாடியை சேர்ந்த கோபிநாத் (31) ஆகியோர் என்பதும், திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் இந்த வழக்குகளில் சென்னை சைதாபேட்டையை சேர்ந்த வினோத்குமார் (29), சென்னை சேலையூரை சேர்ந்த சிவகுரு (29) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் வெங்கடேஷ், கோபிநாத், வினோத் குமார், சிவகுரு ஆகிய 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினார் கள். 
 
4 பேர் கைது 

விசாரணையில் கடந்த மாதம் 4-ந் தேதி மாக்கினாம்பட்டி செல்வகணபதி நகரிலும், 25-ந் தேதி மின்நகர் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து 7 ¼ பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியதும், பாலக்காடு ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 11¼ பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை, ஐ.ஜி., டி.ஐ.ஜி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாராட்டினர்.


Next Story