திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அடிப்படை வசதிகள் கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அடிப்படை வசதிகள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 March 2021 4:54 AM GMT (Updated: 19 March 2021 4:54 AM GMT)

திருவள்ளூர் அருகே மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் பொருட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 18 ஆயிரத்து 838 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தாங்களாகவே சக்கர நாற்காலியில் வந்து செல்லும் விதமாக ஒரு அடி உயரத்திற்கு 10 அடி நீளமுள்ள சாய்தளம் நேராகவோ அல்லது எல் வடிவிலோ ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களது வாக்குச்சாவடி மற்றும் வரிசை எண் விவரம் அறிவதற்கு உதவியாக பிரெய்லி எழுத்தில் பொறிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் எளிதாக ஓட்டுச்சாவடிக்கு வருவதற்கு உதவியாக 3 ஆயிரத்து 553 சக்கர நாற்காலிகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக மாற்றுத்திறனாளிகளை அமர்த்தி சக்கர நாற்காலியுடன் அழைத்து வருவதற்காகவும் என்.எஸ்.எஸ், என்.சி.சி, மற்றும் ஸ்கவுட் மாணவர்கள் மற்றும் தொண்டுள்ளம் கொண்ட பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் ஓட்டுச்சாவடியில் வரிசையில் நிற்காமல் நேரடியாக ஓட்டுச்சாவடிக்கு சொல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழிகாட்டுவதற்காக வாக்குச்சாவடி நிலையங்களில் வழிகாட்டும் அலுவலர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் பேசுவதற்காக அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பார்வை குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக ஓட்டுப்பதிவு செய்யும் இடத்தில் 200 வாட் கொண்ட மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வேட்பாளர் பெயர், கட்சியின் பெயர், சின்னம் மற்றும் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவு செய்வதற்கான வரிசை எண் ஆகிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு வசதியாக பார்வையாளர்கள் பயன்படுத்தும் பிரெய்லி எழுத்துகள் பொறிக்கப்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வழங்கப்பட்டுள்ளது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக ஓட்டு அளிக்கும் எந்திரத்தில் வேட்பாளரின் வரிசை எண் பிரெய்லி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்கு மைய வளாகத்தில் வாகனம் நிறுத்துமிடம் என மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளில் குறைகள் ஏதும் இருந்தால் உடனடியாக மாவட்ட கலெக்டரின் தேர்தல் புகார் பிரிவு தொலைபேசி எண் 044- 27661950,044- 27661951, 9445911161 வாட்ஸ்அப் எண் மற்றும் 18004258515 என்ற கட்டணமில்லா எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story