திம்பம் மலைப்பாதையில் தொடரும் சம்பவம்; திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் தொடரும் சம்பவம்; திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 March 2021 11:28 PM GMT (Updated: 19 March 2021 11:28 PM GMT)

திம்பம் மலைப்பாதையில் நேற்று மீண்டும் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடரும் சம்பவத்தால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் நேற்று மீண்டும் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடரும் சம்பவத்தால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
மீண்டும் சம்பவம்
தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை வழியாக தினமும் கார், பஸ், லாரி, வேன், இருசக்கர வாகனம் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறுகிய வளைவுகளை கொண்டதால் இந்த வழியாக அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் திரும்ப முடியாமலும், பழுதாகியும் நின்று விடுகின்றன.
சில நேரங்களில் பாரம் தாங்காமல் கவிழ்ந்தும் விடுகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. நேற்று முன்தினம் திம்பம் மலைப்பாதை 26-வது கொண்டை ஊசி வளைவு அருகே மர துண்டுகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று திரும்ப முடியாமல் நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் நேற்றும் ஒரு லாரி மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திரும்ப முடியாமல் நின்ற லாரி
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் குடகுவில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு மர துண்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. மதியம் 12 மணி அளவில் 26-வது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது அதிக பாரம் காரணமாக லாரி திரும்ப முடியாமல் நின்றுவிட்டது.
இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறங்களிலும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகியது. வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
போக்குவரத்து பாதிப்பு
லாரி திரும்ப முடியாமல் நின்றதால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ‘அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை ஆசனூர் சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தி திரும்ப அனுப்ப வேண்டும். ஆனால் அந்த வாகனங்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விடுவதால் திம்பம் மலைப்பாதையில் தினம் தினம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது’ என்றனர்.

Next Story