ஓடும் ெரயிலில் இருந்து தவறி விழுந்த பட்டதாரி வாலிபர் சாவு


ஓடும் ெரயிலில் இருந்து தவறி விழுந்த பட்டதாரி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 20 March 2021 5:55 PM GMT (Updated: 20 March 2021 5:55 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பட்டதாரி வாலிபர் இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி, 
ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பட்டதாரி வாலிபர் இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டதாரி வாலிபர்
மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டை சேர்ந்த சந்திரனாந்தான் மகன் ஜிஸ்னு (வயது 22). எம்.காம் பட்டதாரியான இவர், கருங்கல் பகுதியில் உள்ள தொழிலாளர் நல வாரியத்தில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜிஸ்னு தனது தந்தையுடன் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களை வாங்க சென்றார். அப்போது ஜிஸ்னுவின் நண்பர் கிருஷ்ணன், தாயாருடன் வந்திருந்தார். அங்கு சான்றிதழ் வாங்கியதும், 4 பேரும் கோவை ரெயிலில் ஏறி நாகர்கோவிலுக்கு புறப்பட்டனர்.
திடீர் மாயம்
நாகர்கோவில் வந்ததும், பார்த்த போது, ஜிஸ்னுவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரனாந்தான் நாகர்கோவில் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப், ஜிஸ்னுவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துக்கொண்டு குறிப்பிட்ட தண்டவாள பகுதியில் தேடினார். தோவாளையில் இருந்து அப்படியே தண்டவாளம் வழியாக டார்ச் லைட் அடித்துக்கொண்டு திருமலைபுரம் பகுதிகளில் சுமார் 3 கி.மீ. தூரம் தேடினார்கள். ஆனாலும் மாயமான ஜிஸ்னுவை கண்டுபிடிக்க முடியவில்லை. 
பிணம் மீட்பு
இந்த நிலையில் நேற்று காலையில் திருமலைபுரம் பகுதியை சேர்ந்த சிலர் அப்பகுதியில் சென்றபோது தண்டவாளத்தை ஒட்டி உள்ள புதருக்குள் ஒருவர் பிணமாக கிடப்பதை கண்டு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
உடனே ெரயில்வே இன்ஸ்பெக்டர் கேத்ரின், சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது திருமலைபுரம் பகுதியில் தண்டவாளத்தை யொட்டி புதருக்குள் ஜிஸ்னு பிணமாக கிடந்தார். உடனே போலீசார் ஜிஸ்னு உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
விசாரணை
இதுபற்றி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story