சேலத்தில் ரூ.3 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் நகை பறிப்பு ஜோதிடர் கைது


சேலத்தில் ரூ.3 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் நகை பறிப்பு ஜோதிடர் கைது
x
தினத்தந்தி 20 March 2021 8:36 PM GMT (Updated: 20 March 2021 8:36 PM GMT)

சேலத்தில் ரூ.3 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் நகையை பறித்து சென்ற ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.

சேலம்:
சேலத்தில் ரூ.3 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் நகையை பறித்து சென்ற ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.
ரூ.3 லட்சம் கடன்
சேலம் செட்டிச்சாவடி டால்மியா போர்டு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 67). ஜோதிடர். இவருடைய வீட்டிற்கு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மனைவி கண்ணம்மாள் (55) ஜோதிடம் பார்க்க வந்துள்ளார். அப்போது, அவரிடம் உங்களுக்கு நேரம் சரியில்லை. நீங்கள் மிகவும் வறுமையில் வாடி வருகிறீர்கள். அதனால் சில பரிகாரங்கள் செய்தால் நிவர்த்தியாகி விடும் என்று கூறினார். மேலும், சேலத்திற்கு வந்தால், உங்களுக்கு ரூ.3 லட்சம் குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருகிறேன். அதை வைத்து நீங்கள் தொழில் செய்து பிறகு கடனை அடைத்து விடலாம் என ஜோதிடர் ராமசாமி கூறியுள்ளார்.
இதை நம்பிய கண்ணம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பென்னாகரத்தில் இருந்து பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் ராமசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு சேலத்திற்கு வந்து உள்ளதாக கண்ணம்மாள் தெரிவித்தார். இதையடுத்து சிறிது நேரத்தில் அங்கு வந்த ராமசாமி, கண்ணம்மாளை அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கி கொடுத்தார்.
நகை பறிப்பு
அப்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை கண்டதும் ஜோதிடர், நூல் மூலம் தங்க செயினை இணைத்துள்ளீர்கள். அதை தங்கத்தில் செய்து போட்டால் நன்மை கிடைக்கும் என்று கூறி ரூ.3 லட்சம் ரொக்கம் இருப்பதாக கூறி ஒரு பார்சலை அவரிடம் கொடுத்தார்.
பின்னர் ராமசாமி அருகில் உள்ள நகைக்கடையில் செயினை மாற்றி தருவதாக கூறி கண்ணம்மாள் கழுத்தில் கிடந்த செயினை வாங்கிக்கொண்டு சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணம்மாள் கையில் இருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் பணம் இல்லாததும், அதற்கு மாறாக தெர்மாகோல் அட்டைகளை துண்டு துண்டாக வெட்டி பண்டல் போட்டு வைத்திருந்ததும், ஜோதிடர் ராமசாமி பணம் தருவதாக கூறி நூதன முறையில் ஏமாற்றி தங்க நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.
ஜோதிடர் கைது
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் கண்ணம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணம்மாளின் செல்போனில் பதிவான அழைப்புகளை வைத்து ஜோதிடர் ராமசாமி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் தங்கியுள்ள இடத்திற்கு போலீசார் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story