4 தொகுதிகளில் 58 வேட்புமனுக்கள் ஏற்பு


4 தொகுதிகளில் 58 வேட்புமனுக்கள் ஏற்பு
x
தினத்தந்தி 20 March 2021 9:13 PM GMT (Updated: 20 March 2021 9:13 PM GMT)

பெரம்பலூர்-9, அரியலூர்-13, குன்னம்-23, ஜெயங்கொண்டம்-13 என 4 தொகுதிகளில் மொத்தம் 58 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

அரியலூர்:

வேட்புமனு பரிசீலனை
சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் பெரம்பலூர் (தனி) தொகுதியில் மொத்தம் 17 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் மீதான பரிசீலனை பெரம்பலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா தலைமையில், வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் முன்னிலையில் நடந்தது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள், ஒரு சுயேச்சை வேட்பாளர் என மொத்தம் 9 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. ஒரு சுயேச்சை வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் மாற்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும், அ.தி.மு.க. வேட்பாளர் கூடுதலாக தாக்கல் செய்த 2 வேட்பு மனுக்களும், தி.மு.க. வேட்பாளர் கூடுதலாக தாக்கல் செய்த ஒரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது. வேட்பு மனு ஏற்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அடங்கிய அறிவிப்பினையும், வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்ட, நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய அறிவிப்பினையும் தகவல் பலகையில் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா ஒட்டினார்.
குன்னம்
இதேபோல் குன்னம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 32 வேட்புமனுக்களில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், பகுஜன் சமாஜ் கட்சி, புதிய தலைமுறை மக்கள் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 23 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. குறைபாடு இருந்ததால் 3 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தாக்கல் செய்த கூடுதல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாற்று வேட்பாளர்கள் 4 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 22 வேட்புமனுக்களில் அ.தி.மு.க., ம.தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, புதிய தலைமுறை மக்கள் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரி ஏழுமலை அறிவித்தார். மாற்று வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டது. மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதியில் தேர்தல் பார்வையாளர் அமர்நாத் தலைமையில் வேட்புமனு பரிசீலனை ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இத்தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 22 வேட்புமனுக்களில் தி.மு.க., பா.ம.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, அண்ணா திராவிடர் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. மாற்று வேட்பாளர்கள் தாக்கல் செய்தது உள்பட 9 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்று தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். மேலும் நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

Next Story