மின் இணைப்பு வழங்கும்போது தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; மின்சார கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு


மின் இணைப்பு வழங்கும்போது தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; மின்சார கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 March 2021 11:32 AM GMT (Updated: 21 March 2021 11:32 AM GMT)

மின் இணைப்பு வழங்கும்போது தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பணிமுடிப்பு சான்றிதழ்
அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டப்படுவதை தடுக்கும்விதமாக, கட்டிட பணிமுடிப்புச் சான்றிதழ் இல்லாமல், மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கக் கூடாது என்ற சென்னை ஐகோர்ட்டு 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், கட்டிட பணிமுடிப்பு சான்றிதழை கட்டாயமாக்கி 2019-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை பிறப்பித்தது.

அதை பின்பற்றி, புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிட பணிமுடிப்பு சான்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உத்தரவு பிறப்பித்தது.

இயக்குனர் உத்தரவு
அடுத்த சில மாதங்களில் அந்த உத்தரவை திரும்பப்பெறுவதாக மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வினியோக இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் என்ற அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

இணைப்பு துண்டிப்பு
அப்போது மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘குறைந்த மின் அழுத்தத்தைப் பயன்படுத்தும் சிறிய கடைகள் மற்றும் ஒரு குடியிருப்பில் இருக்கும் சிறிய பகுதி ஆகியவற்றுக்கு மட்டுமே பணிமுடிப்புச் சான்றை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சொத்துவரி சான்றை சமர்ப்பிக்க வேண்டும். அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் சீல் வைத்த உடனேயே அந்த கட்டுமானத்துக்கான மின் இணைப்பு துண்டிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

பின்பற்ற வேண்டும்
அந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மின் இணைப்பு வழங்கும்போது தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Next Story