தர்பூசணி விற்பனை அமோகம்


தர்பூசணி விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 21 March 2021 9:38 PM GMT (Updated: 21 March 2021 9:38 PM GMT)

உடையார்பாளையத்தில் தர்பூசணி விற்பனை அமோகமாக நடக்கிறது. ஒரு தர்பூசணி ரூ.20 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.

உடையார்பாளையம்:

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
அரியலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மதிய நேரங்களில் வெளியே வரும் பொதுமக்கள் பழச்சாறு, இளநீர், நீர்மோர், குளிர்பானங்கள், கம்பங்கூழ் போன்றவற்றை குடித்தும், நுங்கு, ெவள்ளரிபிஞ்சு போன்றவற்றை உண்டும் வெப்பத்தை சமாளிக்கின்றனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மேலூரில் விற்பனைக்காக சாலையோரத்தில் தர்பூசணிகள் குவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து சரக்கு ஆட்டோ மூலம் அந்த தர்பூசணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அளவுக்கேற்ப ஒரு தர்பூசணி ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தர்பூசணி வெட்டப்பட்டு 5 துண்டுகள் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனை அமோகம்
அந்த வழியாக செல்லும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தர்பூசணி பழங்களை வாங்கி உண்கின்றனர். மேலும் வீட்டிற்கும் வாங்கி செல்கின்றனர். இதனால் தர்பூசணி விற்பனை அமோகமாக உள்ளது என்றும், அக்னி நட்சத்திரம் தொடங்கியபின்னர் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்போது, தர்பூசணி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, கொள்முதல் செய்த தர்பூசணி அனைத்தும் வீணாகியதால் கவலை அடைந்தோம். அதேபோல் தற்போது கொரோனா மீண்டும் பரவி வருவதால் விற்பனை பாதிக்குமோ என்று கவலையாக உள்ளது, என்றனர்.

Next Story