அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றால் மேலும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும்; பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு


அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றால் மேலும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும்; பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 21 March 2021 9:39 PM GMT (Updated: 21 March 2021 9:39 PM GMT)

அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றால் மேலும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ஆண்டிமடம்:

பிரசாரம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பாலுவை ஆதரித்து, ஆண்டிமடம் நான்குரோடு பகுதியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காரில் அமர்ந்திருந்தபடியே பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரியலூர் மாவட்ட பகுதிக்கு வந்தால் எனது மூத்த மகன் காடுவெட்டி குரு நினைவுதான் என் மனதை வாட்டி, வேதனை அடைய செய்கிறது. ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு பா.ம.க.வில் இருந்து ஒரு சிறந்த, திறமையான வேட்பாளரை இப்பகுதி மக்களுக்கு வழங்கி உள்ளோம். அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பட்டாளி சொந்தங்கள், வாக்காளர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் சுத்தமல்லி பகுதி வழியாக பொன்னேரிக்கு ஆற்றினை கொண்டு வருவோம் என்று ஒரு சிறப்பான திட்டத்தினை வகுத்துள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது
அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி ஒரு சிறந்த கூட்டணி. மக்களுக்கு பல நல்ல திட்டங்களை வகுத்துள்ள கூட்டணி. தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர் போன்ற ஏராளமான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த கூட்டணி வெற்றி பெற்றால், இன்னும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும். நமது தேர்தல் வாக்குறுதிகளை காப்பியடித்து தி.மு.க. அப்படியே அளித்துள்ளது. அதிலும் காப்பி அடிக்கக்கூட சரியாக தெரியாமல் வாக்குறுதி வெளியிட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகள் என்று பலர் தலை தூக்குவார்கள். தி.மு.க. போன்ற மோசமான ஒரு இயக்கம் மீண்டும் இந்த மண்ணில் ஆட்சிக்கு வரக்கூடாது. கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சி ஒரு இருண்ட காலமாக நமக்கு இருந்தது. இந்த தேர்தலோடு தி.மு.க. என்ற மோசமான ஒரு கட்சி இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம்
இதேபோல் ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் மற்றும் குன்னம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து, ஜெயங்கொண்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்காக குரு பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். நானும் அவருடன் சேர்ந்து பல போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஜெயங்கொண்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். ஜெயங்கொண்டம் மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்பது உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகம் இருளில் மூழ்கும். தொழிலாளிகள் நிம்மதியாக தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து, எதிர்த்து நிற்கும் தி.மு.க. வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும், என்றார்.
தா.பழூர்
தா.பழூர் அண்ணா சிலை அருகே அரியலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் பேசுகையில், இங்கு கூடியிருக்கும் கூட்டம் நமது வெற்றியை காட்டுகிறது. நானும், குருவும்தான் அரியலூர் மாவட்டத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க போராடி பெற்றுத்தந்தோம். அரசு தலைமை கொறடாவாக இருக்கும் தாமரை ராஜேந்திரன், நமது கோரிக்கைகளை பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்று நமக்கான தீர்வுகளைப் பெற்றுத்தந்தார். அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதனால் அவர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டியது நம்முடைய பொறுப்பு. தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும், என்றார்.

Next Story