தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நெடுஞ்சாலைத்துறை, வனத்துறையில் 1 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி உறுதி
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நெடுஞ்சாலைத்துறை, வனத்துறையில் காலியாகவுள்ள 1 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
கன்னிவாடி,
ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி போட்டியிடுகிறார். இவர் அந்த தொகுதியில் சூறாவளி பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். கிராமம், கிராமமாக சென்று இளைஞர்கள், முதியோர், பெண்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.
அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடும் அவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும் அந்தந்த பகுதியில் உள்ள குறைகள், கோரிக்கைகள் குறித்து அவரிடம் எடுத்துரைத்த வண்ணம் உள்ளனர். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக அவர் உறுதி அளித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி விவசாய தோட்டங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகளிடம் வாக்கு சேகரிக்கிறார். விவசாயத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் குறைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். மேலும் தி.மு.க. ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், சலுகைகள் குறித்து எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்தநிலையில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குரும்பபட்டி, கரட்டுப்பட்டி, கிட்டம்பட்டி, போத்திநாயக்கன்பட்டி, பாப்பான்குளம், மேலதிப்பம்பட்டி, கீழதிப்பம்பட்டி, கசவனம்பட்டி, கரிசல்பட்டி, வெல்லம்பட்டி, கோனூர் உள்ளிட்ட 24 கிராமங்களுக்கு சென்று அவர் வாக்கு சேகரித்தார்.
தேர்தல் பிரசாரத்தின் போது அவர் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. அரசு பணியிடங்களை நிரப்பவில்லை. குறிப்பாக நெடுஞ்சாலைத்துறையில் 70 ஆயிரம் பணியிடங்களும், வனத்துறையில் 30 ஆயிரம் பணியிடங்களும் காலியாக உள்ளன. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அந்த காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் சத்துணவு ஊழியர் பணி நியமனத்துக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையை மாற்றுவதற்கு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார்.
அவருடன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சிவகுருசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பார்த்தசாரதி, காங்கிரஸ் கட்சி நிர்வாகி முருகானந்தம், ஐ.ஏ.எஸ். கருப்பையா, புதுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் அருணாச்சலம், கசவனம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி, கோனூர் ஊராட்சி மன்றத்தலைவர் தங்கப்பாண்டி, கரிசல் ஜோசப், ஜஸ்டின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story