கறிக்கோழி தேவை அதிகரித்ததால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
சட்டமன்ற தேர்தல் எதிரொலியாக கறிக்கோழி தேவை அதிகரித்ததால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பொள்ளாச்சி
சட்டமன்ற தேர்தல் எதிரொலியாக கறிக்கோழி தேவை அதிகரித்ததால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கறிக்கோழி உற்பத்தி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை மற்றும் பல்லடம், உடுமலை, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.
இந்த பண்ணைகளில் இருந்து தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் பண்ணை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
விற்பனை அதிகரிப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். வேட்பாளர்களுடன் பலர் உடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு பிரியாணி உள்பட பல்வேறு உணவுகள் சாப்பிட வழங்கப்படுகிறது. இதனால் கறிக்கோழிகளின் தேவை அதிகரித்து உள்ளதால், அதற்காக இறைச்சி கடைகளில் அதிகளவில் ஆர்டர் செய்யப்படுகிறது.
இதனால் விற்பனை அதிகரித்து இருப்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
கறிக்கோழி உற்பத்தி விலையாக கிலோவுக்கு ரூ.74 செலவாகிறது. ஆனால் தற்போது பண்ணை விலை ரூ.94-க்கு விற்பனையாகிறது. அத்துடன் தேவையும் சாதாரணமாகதான் இருந்தது.
தற்போது தேர்தல் என்பதால், கறிக்கோழி அதிகளவில் ஆர்டர் செய்வதால், அதன் விற்பனை அதிகரித்து இருக்கிறது.
சில கடைகளில் அதன் விற்பனை இருமடங்கு உயர்ந்து இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்ததால் கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளதால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story