அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் திடீர் சாலை மறியல் வியாபாரிகள் தானியங்களை கொள்முதல் செய்ய மறுத்ததால் ஆத்திரம்


அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் திடீர் சாலை மறியல் வியாபாரிகள் தானியங்களை கொள்முதல் செய்ய மறுத்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 22 March 2021 10:42 PM IST (Updated: 22 March 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் திடீர் சாலை மறியல் வியாபாரிகள் தானியங்களை கொள்முதல் செய்ய மறுத்ததால் ஆத்திரம்

திருக்கோயிலூர்

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.11 கோடி பாக்கி வைத்துள்ள 40 வியாபாரிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. தவறாக கணக்கீடு செய்து நோட்டீஸ் அனுப்புவது தங்களுக்கு மன உளைச்சலை உண்டுபண்ணுவதாக கூறி ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளிடம் பிரச்சினை செய்தனர். இதற்கு உரிய பதில் கிடைக்காதவரை விவசாயிகளிடம் தானியங்களை கொள்முதல் செய்யப்போவதில்லை என வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பகல் 12 மணிவரை வியாபாரிகள் தானியங்களை கொள்முதல் செய்யாததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரசம் பேசினர். ஆனால்  போராட்டத்தை விலக்கி கொள்ள விவசாயிகள் மறுத்தனர். 

பின்னர் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கவுதமசிகாமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் விழுப்புரம் மாவட்ட விற்பனை குழு செயலாளர் கண்ணன், ஒழுங்குமுறை விற்பனை கூட மேலாளர் சரவணன், திருக்கோவிலூர் நெல் வியாபாரிகள் சங்க தலைவர் தொழிலதிபர் ஜெ.முருகன் ஆகியோர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மாலை 4 மணிக்கு பிறகு வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு விவசாயிகளிடம் தானியங்களை கொள்முதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் ரூ.70 லட்சத்துக்கு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. 


Next Story