நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் விழா: தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை இந்து உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் பங்குனி மாத திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு சிம்ம வாகனத்தில் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள மண்டகபடியில் அமர்ந்து அருள்பாலித்தார். பின்னர் வாணவேடிக்கையுடன் மாரியம்மன் கோவிலில் இருந்து நகர்வலம் தொடங்கியது.
நிலக்கோட்டை மெயின் பஜார், நால்ரோடு, நடராஜபுரம் தெரு, சவுராஷ்டிரா பள்ளி, பெரிய காளியம்மன் கோவில் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
இதனையடுத்து பத்ரகாளியம்மன் மன்றம் மண்டகப்படியில் அம்மன் கொலு மண்டபத்தில் வீற்றிருந்தார். அப்போது, தீச்சட்டி எடுத்து பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதேபோல் பக்தர்கள், கரும்புத்தொட்டிலை வழிபட்டனர். இந்த விழாவில் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை நூற்றாண்டு கண்ட இந்து நாடார் உறவின் முறை காரியதரிசிகள் சுசீந்திரன், பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலைப்பாண்டியன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story