தர்மபுரி அன்னசாகரத்தில் சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தர்மபுரி,
தர்மபுரி அன்னசாகரத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி சாலுக்கிராமம் அழைத்தலும், புற்று மண் எடுத்தல் மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் ஆட்டுக்கிடா வாகனத்தில் சாமி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நரி வாகன உற்சவமும், நாளை (புதன்கிழமை) பூத வாகன உற்சவமும், வருகிற 25-ந் தேதி நாக வாகன உற்சவமும், 26-ந் தேதி பால்குட ஊர்வலம் மற்றும் சாமி திருக்கல்யாணம் நடக்கிறது. பின்னர் தோரணவாயில் ஊஞ்சல் சேவை உற்சவமும், மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது. 27-ந்தேதி விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடக்கிறது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நாளான வருகிற 28-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடக்கிறது. காலை 9 மணிக்கு பெண்கள் மட்டும் வடம்பிடிக்கும் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரோட்டமும் நடக்கிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வருகிற 29-ந் தேதி வேடபறி உற்சவமும், வருகிற 30-ந் தேதி விழா கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. 31-ந் தேதி சயன உற்சவமும், வருகிற 1-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் விமலா, ஆய்வாளர் சங்கர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story