வீட்டில் பதுக்கிய 150 கிலோ கஞ்சா பறிமுதல்


வீட்டில் பதுக்கிய 150 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 22 March 2021 11:37 PM IST (Updated: 22 March 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

கருமத்தம்பட்டியில் கேரளாவுக்கு கடத்த வீட்டில் பதுக்கிய 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கருமத்தம்பட்டி,

கருமத்தம்பட்டியில் கேரளாவுக்கு கடத்த வீட்டில் பதுக்கிய 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தம்பதியை போலீசார் கைது செய்தனர். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

150 கிலோ கஞ்சா பதுக்கல்

கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கருமத்தம்பட்டி இன்ஸ் பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கருமத்தம்பட்டி அருகே பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் மாலையில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது அந்த வீட்டில் 2 கிலோ எடை கொண்ட 75 பாக்கெட்டுகளில் கஞ்சா வைக்கப்பட்டு இருந்தது. அவற்றின் மொத்த எடை 150 கிலோ ஆகும்.

தம்பதி கைது 

இதையடுத்து அந்த கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து வீட்டில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில் அவர்கள் தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த நடராஜன் (வயது 62), அவருடைய மனைவி கலாவதி (60) ஆகியோர் என்பது தெரியவந்தது. 

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து கேரள மாநிலத்துக்கு கடத்துவதற்காக கஞ்சா பதுக்கிவைத்தது கண்டுபிடிக்கப் பட்டது. 

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:- 

கேரளாவுக்கு சப்ளை செய்ய திட்டம் 

கேரளா கோவை அருகே உள்ளதால், 2 பேரும் கருமத்தம்பட்டியை தேர்வு செய்து உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து உள்ளனர். 

பின்னர் வியாபாரிகள் மூலம் கேரளாவுக்கு சப்ளை செய்ய திட்டமிட்டு பொட்டலம் போட்டு தயாராக வைத்து உள்ளனர். அதற்குள் சிக்கிவிட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். 


Next Story