கிராம மக்கள் உண்ணாவிரதம்


கிராம மக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 23 March 2021 12:17 AM IST (Updated: 23 March 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி-மேலூர் இடையே பைபாஸ் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்குடி அருகே கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி,

காரைக்குடி-மேலூர் இடையே பைபாஸ் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்குடி அருகே கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலம் சர்வே

காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கூலிவேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் காரைக்குடியில் இருந்து மேலூர் வரை பைபாஸ் சாலை அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சர்வே அளக்கப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சாக நடைபெற்று வருகிறது.
 ஏற்கனவே குன்றக்குடியில் இருந்து பிள்ளையார்பட்டி வரை இந்த பணிக்காக சாலையின் இருபுறம் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு தற்போது அந்த பகுதியில் சாலைகளை விரிவுப்படுத்துவதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

உண்ணாவிரதம்

இந்நிலையில் இந்த சாலை காரைக்குடியை அடுத்த கோவிலூர் வழியாக செல்லும் திருச்சி-ராமேசுவரம் பைபாஸ் சாலையில் இணைப்பதற்காக ஏற்கனவே சர்வே எடுக்கும் பணி நிறைவு பெற்று அந்த பகுதியில் உள்ள மரங்களை அகற்றும் பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினர் காத்திருந்தனர். இந்நிலையில் ஏற்கனவே பாதரக்குடி வழியாக இந்த சாலை சென்றால் இங்குள்ள பெரும்பாலான வீடுகள் இடிக்கப்பட்டும், பெரும்பாலான விவசாய நிலங்கள் மற்றும் கண்மாய்கள் பறிபோகும் நிலை உள்ளதாக இந்த பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைபாஸ் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மீண்டும் இந்த பணி தொடங்க உள்ளதாக தகவல் அறிந்த அக்கிராம மக்கள் நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பாதரக்குடி பஸ் நிலையம் முன்பு திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்த குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி தலைமையிலான போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் கூறும் போது, எங்கள் கிராமத்தின் வழியாக செல்லும் இந்த பைபாஸ் சாலையினால் இங்குள்ள ஏராளமான குடியிருப்பு வீடுகள் பாதிக்கப்பட்டும், இங்குள்ள கண்மாய்கள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலும் அழிந்து போகும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை வேறு மாற்று வழியில் செல்ல நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து தற்போது தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் உங்களது கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று வழியில் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள உறுதியளிக்கிறோம் என போலீசார் கிராம மக்களிடம் கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story