குழாய் உடைந்து 20 அடி உயரத்துக்கு சீறிப்பாய்ந்த தண்ணீர்
குடிநீர் திட்டப்பணிகள் சோதனை செய்ததில் குழாய் உடைந்து 20 அடி உயரத்துக்கு சீறிப்பாய்ந்த தண்ணீர் சாலையில் ஆறுபோல ஓடியது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பவானி ஆற்று நீரை ஆதாரமாகக்கொண்டு திருப்பூர் மாநகராட்சி 4-வது குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக திருப்பூர் மாநகராட்சியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை குழாய் பதிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னர் வழக்கமாக 2 கி.மீ. தூரத்திற்கு பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் நீர்கசிவு உள்ளதா என்பதை கண்டறிய குழாய்களில் தண்ணீரை நிரப்பி அழுத்தம் கொடுத்து சோதனை செய்வது வழக்கம்.
20 அடி உயரத்துக்கு சீறிப்பாய்ந்த தண்ணீர்
அதன்படி நேற்று காலை மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோடு காய்கறி மார்க்கெட் பகுதியில் இருந்து குமாரபுரம் பாலம் அருகே வரை பதிக்கப்பட்ட குழாய்களில் சோதனை செய்யப்பட்டது.
அப்போது தண்ணீர் அழுத்தம் காரணமாக குழாய்களை இணைக்கும் பகுதியில் உடைந்து 20 அடி உயரத்துக்கு ராட்சத அலைபோல தண்ணீர் பொங்கி எழுந்து சாலையில் ஆறுபோல ஓடியது.
இதைப்பார்த்ததும் அந்தப்பகுதி வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓடினார்கள். வாகனங்களில் சென்றவர்கள் அவற்றை நிறுத்தி வேடிக்கை பார்த்ததும் செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.
சீரமைக்கும் பணி
குழாய் உடைந்ததால் தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த தண்ணீர் அனைத்தும் வெளியேற 15 நிமிடம் ஆனது. அதுவரை அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் உடைந்த குழாயை சீரமைக்கும் பணியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story