விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்ததும் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உறுதியளித்தார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் கார்த்திகேயன், புவனகிரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன், திட்டக்குடி தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் தடா.பெரியசாமி ஆகியோரை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விருத்தாசலத்தில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து உள்ளது. கடந்த 4 ஆண்டு காலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அருமையான திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அவரது ஆட்சியில் ஒரு குறையை கூட மக்கள் கூறவில்லை. ஆனால் எதிர்க்கட்சியான தி.மு.க. ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை.
விருத்தாசலம் புதிய மாவட்டம்
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை ஒரு அமுதசுரபி. அள்ள அள்ள குறையாத திட்டங்களையெல்லாம் அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்கள். பா.ம.க. தேர்தல் அறிக்கை ஒரு வளர்ச்சியின் ஆயுதம். வளர்ச்சி பெற வேண்டுமென்றால் விவசாயம் செழிக்க வேண்டும். அதற்கான நிறைய திட்டங்களை 2 கட்சிகளும் கூறியுள்ளது.
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. அவ்வாறு ஆட்சி அமைந்தவுடன் கடலூர் மாவட்டத்தை 2 ஆக பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று இந்த நேரத்தில் நான் உறுதி அளிக்கிறேன்.
அரசு மகளிர் கல்லூரி
அதுமட்டுமின்றி விருத்தாசலம் மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்போம். அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைத்து தருவோம். விருத்தாசலத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைத்து தரப்படும். விருத்தாசலத்தில் மூடப்பட்டுள்ள சூரியகாந்தி, மணிலா எண்ணெய் பிழியும் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தொகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இல்லை. அதனை அமைத்துத் தருவதற்கான முயற்சிகளை செய்வோம். விருத்தாசலம் செராமிக் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படும். விருத்தாசலத்தில் சிறப்பு முந்திரி பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்.
எனவே இங்கு போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story