மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு கொரோனா


மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 March 2021 4:53 AM IST (Updated: 23 March 2021 4:59 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. தற்போது தினமும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 50 பேர் உயிரிழந்து உள்ளனர். 

கொரோனா அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. 

அங்கு பணிபுரிந்து வரும் 2 போலீசாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அவர்களுன் பணிபுரிந்த போலீசார் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்கள் என 50 பேரிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அதிகாரி அலுவலகத்தில் தடுப்பு நடவடிக்கையாக நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்திலும் சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருக்கும் நபர்களை கண்டறிந்து சளி மாதிரி சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட வழங்கல் அதிகாரியுடன் தொடர்பில் இருந்த 50 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு, ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்றனர்.

Next Story