ஒரு ஸ்டாலின் இல்லை, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது- ஓமலூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


ஒரு ஸ்டாலின் இல்லை, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது- ஓமலூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 23 March 2021 5:34 AM IST (Updated: 23 March 2021 5:34 AM IST)
t-max-icont-min-icon

ஒரு ஸ்டாலின் இல்லை, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது என்று ஓமலூர் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம்:
ஒரு ஸ்டாலின் இல்லை, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது என்று ஓமலூர் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தேர்தல் பிரசாரம்
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.மணியை ஆதரித்து நேற்று இரவு தீவட்டிப்பட்டி பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 
அப்போது அவர் பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாகும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த தேர்தலோடு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்று அவதூறு பரப்பி வருகிறார். ஒரு ஸ்டாலின் அல்ல, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது. 
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க.. எம்.ஜி.ஆர். தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே உழைத்தார். அவரது வழியில் வந்த ஜெயலலிதாவும் தமிழக மக்களே எனது வாரிசு என்று எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றினார். இருபெரும் தலைவர்கள் வழியில் தற்போது அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 
வெற்றி நடைபோடும் தமிழகம்
வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற வார்த்தையை கேட்டாலே மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார். அத்தனை திட்டங்களை தமிழக மக்களுக்கு வாரி வழங்கி உள்ளோம். பல்வேறு திட்டங்களால் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இதனால் நாடே பாராட்டும் வகையில் தமிழகம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. 
மு.க.ஸ்டாலின் கூறுவதை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். எத்தனை அவதூறுகள் பேசினாலும் அ.தி.மு.க. தாழ்ந்து போகாது. எத்தனை வசை பாடினாலும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தக்க தண்டனை வழங்க வேண்டும். 
சேலம் மாவட்டத்தில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். 
இறைவன் கொடுத்த வரம்
செல்லும் இடமெல்லாம் உயர்மட்ட மேம்பாலங்கள் மற்றும் தரமான தார்சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டம் மூலம் மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது. இயற்கையே நமக்கு சாதகமாக இருப்பதால் மேட்டூர் அணையில் எப்போதும் தண்ணீர் நிரம்பி இருப்பதை காண முடிகிறது. விவசாயம் செழிக்கிறது. இதனால் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. இதுவே இறைவன் கொடுத்த வரம் ஆகும். 
அ.தி.மு.க. ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றும், தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டம் செயல்படுத்தப்பட்டது என்றும் மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி பொது மக்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது. 
2 ஏக்கர் நிலம்
அதேநேரம் 2006-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் எத்தனை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது என்று கூற முடியுமா? நிலம் உள்ள நபர்களிடம் தி.மு.க.வினர் மிரட்டி அபகரித்துக் கொள்வார்கள். தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது. பெண்கள் வெளியே நடமாட முடியாது. 
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் நாடே அமைதிப் பூங்காவாக இருக்கிறது. சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று கூறி வருகின்றனர். சிறப்பான நிர்வாகத் திறமையால் உள்ளாட்சி துறை, நீர் மேலாண்மை, போக்குவரத்து, மின்சாரம், சமூகநலம், வேளாண்மை உள்பட பல்வேறு துறைகள் சிறப்பாக செயல்பட்டதால் பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது. 
இதனை மு.க.ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர் எங்கு சென்றாலும் என்னை பற்றியே பேசி வருகிறார். என் பெயரை உச்சரிக்கா விட்டால் அவருக்கு தூக்கம் வராது. ஏதோ நான் எப்படி இந்த பதவிக்கு வந்தேன் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்-அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதனால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
கடும் பசி
மு.க.ஸ்டாலின் தந்தை கருணாநிதி எப்படி முதல்-அமைச்சர் ஆனார் என்று தெரியுமா? நேரடியாக அவர் ஆகவில்லை. அண்ணாவின் மறைவுக்குப்பின் கருணாநிதி முதல்-அமைச்சர் ஆனார். தி.மு.க ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் நடைபெறாது. மக்களை அடிமையாக நடத்தி சர்வாதிகார ஆட்சியை நடத்துவார்கள். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் தி.மு.க.வினர் கடும் பசியில் உள்ளனர். இதனால் மக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்.
ஏதாவது தில்லுமுல்லு வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். இதனால் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் இடம்பெற்று உள்ளன. 
ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லாமல் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக வாசிங்மிஷின் வழங்கப்படும். 6 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் போன்ற எண்ணற்ற பல்வேறு திட்டங்கள் ஆட்சி அமைந்தவுடன் செயல்படுத்தப்படும். ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். 
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெற்றிவேல் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்பட பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா. உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story