நத்தம் தொகுதியில் வீடு, வீடாக தி.மு.க. வேட்பாளர் ஆண்டி அம்பலம் வாக்கு சேகரிப்பு
நத்தம் தொகுதியில் வீடு, வீடாக தி.மு.க. வேட்பாளர் ஆண்டி அம்பலம் வாக்கு சேகரித்து வருகிறார்.
நத்தம்,
நத்தம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆண்டி அம்பலம் போட்டியிடுகிறார். இவர், அந்த தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் நத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முதல் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக அவர், நத்தம் அருகே உள்ள முளையூரில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.
சின்னமுளையூர், வேலாயுதம்பட்டி, உலுப்பக்குடி, புன்னப்பட்டி, வத்திபட்டி, பரளி, லிங்கவாடி, வேம்பரளி, பரளிபுதூர் உள்ளிட்ட 50&க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு, வீடாக சென்று அவர் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். பிரசாரத்தில் அவர் கூறும்போது, தி.மு.க. தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். நத்தம் தொகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆளும் அ.தி.மு.க. அரசை அகற்றிவிட்டு தி.மு.க அரசு அமைய வேண்டும். கிராமப்புற மக்களின் நலன் கருதி தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலை, 150 நாட்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 2021&ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைக்கும் ஆண்டாக மாறும். நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
இதேபோல் ஆண்டிஅம்பலத்துக்கு ஆதரவாக தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தின்போது தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமையும் காலம் நெருங்கி விட்டது. ஏழை, எளிய மக்களுக்கான அரசு, தி.மு.க தலைமையிலான அரசு தான். அதற்காக நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆண்டி அம்பலத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
பிரசாரத்தின் போது தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், நகர செயலாளர் முத்துகுமார்சாமி உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே நத்தத்தில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் இ.பெரியசாமி முன்னிலையில் அ.தி.மு.க. நிர்வாகி ராஜகோபால், அந்த கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். இதில் வேலுசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அர.சக்கரபாணி, ஆண்டி அம்பலம், தலை செயற்குழு உறுப்பினர் விஜயன் ஆகியோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story