திருவெறும்பூர் தொகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கான செலவை நானே ஏற்றுக்கொள்வேன் - தி.மு.க.வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்குறுதி
திருவெறும்பூர் தொகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கான செலவை நானே ஏற்றுக்கொள்வேன் என்று தி.மு.க.வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்குறுதி அளித்தார்.
திருவெறும்பூர்,
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாநகராட்சி 30-வது வார்டு பகுதியான சாமி நாதன் தெரு, மிலிட்டரி காலனி, முள்ளிகுளம், விவேகானந்தர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைந்தவுடன், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் உண்டான அனைத்து செலவையும் நானே ஏற்று கொள்வேன் என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும் நமது கழக தேர்தல் அறிக்கையில், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். திருவெறும்பூர் தொகுதியில் வசிக்கும் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கும் இலவச காப்பீடு திட்டம் செய்து தருவேன். தமிழகத்தில் உள்ள அனைத்து ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கும் கழக அரசு அமைந்தவுடன் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்துவேன் என்று கூறினார்.
அப்போது முன்னாள் எம்.எல்.ஏ.சேகரன், பகுதி செயலாளர் தர்மராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story