“தொல்லை இல்லாத நல்லாட்சி தொடர அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்” - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
‘தொல்லை இல்லாத நல்லாட்சி தொடர அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்‘ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம், சாய்பாபா கோவில், கே.கே.நகர், ஜெ.ஜெ.நகர், ஆர்.எஸ்.ரோடு ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் 3 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவர் தொகுதி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. எந்தவித நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. போராட்டம் நடத்துவதிலேயே அவர் கவனம் செலுத்தினார் என்று கூறலாம். ஆனால் நான் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற பிறகு கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை திண்டுக்கல் தொகுதியில் செயல்படுத்தியுள்ளேன்.
இதேபோல் தமிழகம் முழுவதும் ஏராளமான திட்டங்களை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது. தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்&அமைச்சர் ஆவார்.
அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும். கொரோனா பேரிடர் காலத்தில் முதல்&அமைச்சரின் செயல்பாடு சிறப்பாக இருந்தது என்பதை மக்கள் அறிவார்கள். ஆனால் குறை சொல்வது மட்டுமே தி.மு.க.வினரின் கொள்கையாக உள்ளது. ஆனால் அவர்களை நம்ப மக்கள் தயாராக இல்லை. தி.மு.க. ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. தி.மு.க. என்றாலே, மக்களுக்கு தொல்லை கொடுக்கும் கட்சி தான். இதனை மக்கள் நன்றாக அறிவார்கள். தமிழகத்தில் தொல்லை இல்லாத நல்லாட்சி தொடர அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, சேசு, மோகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
Related Tags :
Next Story