முன்விரோதம் காரணமாக வாலிபர் அடித்துக்கொலை


முன்விரோதம் காரணமாக வாலிபர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 23 March 2021 11:42 AM IST (Updated: 23 March 2021 11:42 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதம் காரணமாக வாலிபரை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் கிராவல்மேடு அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. லாரி டிரைவர். இவருடைய மகன் குஜிலி சதீஷ் என்ற சதீஷ்குமார் (வயது 21).

கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்த சதீஷ்குமாரை ஒரு கும்பல் வந்து அழைத்துச்சென்றது. பின்னர் சதீஷ்குமாரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பழைய விமான தளம் அருகே வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில், எடப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி உமாபதி என்பவருக்கும், கொலையான சதீஷ்குமாருக்கும் முன்விரோதம் இருந்ததாகவும், இதன் காரணமாக ரவுடி உமாபதி தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து சதீஷ்குமாரை அடித்துக கொலை செய்ததும் தெரியவந்தது.

தலைமறைவாக உள்ள உமாபதி மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story