ஜெயலலிதா ஆசைப்படி அ.தி.மு.க. ஆட்சி தொடர இரட்டைஇலைக்கு வாக்களியுங்கள்; ஒரத்தநாடு தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கம் பேச்சு
ஜெயலலிதா ஆசைப்படி அ.தி.மு.க. ஆட்சி தொடர இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என ஒரத்தநாடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் பேசினார்.
அ.தி.மு.க. வேட்பாளர் வாக்குசேகரிப்பு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட கிளாமங்கலம், நெம்மேலி ஆகிய 2 இடங்களில் பொதுமக்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் நேரில் சந்தித்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க.வின் ஒரத்தநாடு சட்டசபை தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் 26 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களது காலம் தான் பொற்காலம். நாடு முன்னேற அடிப்படையானது கல்வி. அந்த கல்வியை எல்லோருக்கும் கொடுத்துவிட்டால் நாடு, மக்கள் வளர்ச்சி அடையவார்கள் என கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
இந்தியாவில் தமிழகம் முதல்மாநிலமாக திகழ்கிறது என்றால் அதற்கு அடித்தளம் விட்டவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான். கிளாமங்கலம் ஊராட்சி எம்.ஜி.ஆர். காலம் அதிக வாக்குகள் பெற்று கொடுத்த ஊராட்சியாகும். நான் 3 முறை சட்டசபை உறுப்பினராக இருந்துள்ளேன். 10 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்துள்ளேன். 2016-ல் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் 3 நாட்களில் என்னை எம்.பி.யாக ஆக்கினார்.
வேளாண் கல்லூரி
நான் அமைச்சராக இருந்தபோது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவை தினமும் காலை 11 மணிக்கு 4 அமைச்சர்கள் சந்தித்து பேசுவார்கள். அவர்களில் நானும் ஒருவன். அந்த பெருமை, தகுதியை வைத்து கொண்டு 75 ஆண்டுகாலம் செய்ய முடியாதவற்றை ஒரத்தநாடு தொகுதிக்கு நான் செய்து கொடுத்துள்ளேன். கால்நடை மருத்துவக்கல்லூரி, வேளாண் கல்லூரி, திருவோணத்திலும், திருவையாறிலும் தொழிற்பயிற்சி நிலையம், செங்கிப்பட்டியில் பொறியியல் கல்லூரி போன்றவற்றை கொண்டு வந்துள்ளேன்.எனது எம்.பி.நிதியில் இருந்து நிறைய திட்டங்களை செய்து கொடுத்துள்ளேன். அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி அலுவலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பஸ் நிலையம், சுற்றுச்சுவர், 10 திருமண மண்டபம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. நான் அமைச்சராக இருந்தபோது 500 பேருக்கு மேல் வேலைவாய்ப்பை பெற்று கொடுத்துள்ளேன். ஒரு பைசாக கூட யாருக்கும் செலவு இல்லாமல் வேலையை வாங்கி கொடுத்துள்ளேன்.
அ.தி.மு.க. ஆட்சி தொடர
குடும்ப தலைவிக்கு ரூ.1,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். எல்லா வீடுகளுக்கும் வாஷின்மிஷின் வழங்கப்படும். அரிசி, கோதுமை, சர்க்கரை போன்றவை வீடு தேடி வரும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆசை படி அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் எல்லாதுறையிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் ஆசைப்படி 100 ஆண்டுகாலம் அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் தொடர, இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வர இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களியுங்கள். இந்த பகுதியில் தங்கமுத்து அண்ணனுக்கு எவ்வளவு வாக்கு வாங்கி கொடுத்தீர்களோ, அதே அளவுக்கு வாக்குகளை வாங்கி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைப்போல பின்னையூர், திருநல்லூர், மருங்ககோட்டை, சங்கரநாதர்குடிக்காடு, தெற்குகோட்டை, சோழகன்குடிகாடுகிழக்கு, சோழகன்கரை, கிளாமங்கலம், நெம்மேலிதிப்பியக்குடி, பொய்யுண்டார்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்குசேகரித்து ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளர் பொன்.முத்துவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், பா.ஜ.க. தொகுதி பொறுப்பாளர் துரை, மாவட்ட விவசாய அணி செயலாளர் சாமிஅய்யா, ஒன்றிய தலைவர்
ராமச்சந்திரதுரை, த.மா.கா. ஒன்றிய தலைவர் ராஜா, நிர்வாகிகள் பாலையா, முத்துகிருஷ்ணன், ராசு, பாண்டியன், சத்தியமூர்த்தி, மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கவாஸ்கர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சசிகலா, நிர்வாகி அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story