என்னை வெற்றி பெற செய்தால் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன்; அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம்


என்னை வெற்றி பெற செய்தால் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன்; அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம்
x
தினத்தந்தி 23 March 2021 6:00 PM IST (Updated: 23 March 2021 6:02 PM IST)
t-max-icont-min-icon

என்னை வெற்றி பெற செய்தால் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பேன் என அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம் செய்தார்.

அ.தி.மு.க. வேட்பாளர் வாக்குசேகரிப்பு 
தஞ்சை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்றுகாலை தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் பகுதியில் உள்ள கடைகளுக்கு நேரில் சென்று வியாபாரிகளை சந்தித்து இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்கும்படி பிரசாரம் செய்தார். மேலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தும் என்பதையும் மக்களிடம் விளக்கி கூறினார். தொடர்ந்து புதுப்பட்டினம், கடகடப்பை, உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-
என்னை வெற்றி பெற செய்தால் தொகுதி மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன். தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். உங்களது கோரிக்கைகளை என்னை நேரில் சந்தித்து எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு உடனடியாக வழங்கப்படும். மஞ்சள், வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு, வாழை, சிறுதானியங்கள் உள்ளிட்ட முக்கிய விளை பொருட்களுக்கு தமிழக அரசின் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் 
விலைவாசி உயர்ந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

பால் வழங்கும் திட்டம் 
அத்தகைய பாதிப்பில் இருந்து மக்களுக்கு உதவிட பெட்ரோல், டீசல் விலையினை குறைத்திட மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கனிசமாக குறைத்திட மத்தியஅரசை அ.தி.மு.க. வலியுறுத்தும். அங்கன்வாடி குழந்தைகளுக்கும், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என அனைத்து நிலை மாணாக்கர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி. பால், பால் பவுடர் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். பால் விலை குறைக்கப்படும். நுகர்வோர்களின் நலன் கருதி பால் விற்பனை விலை ரூ.2 குறைக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெற்ற ஆண், பெண் ஓட்டுநர்களின் வளமான வாழ்விற்கு ரூ.25 ஆயிரம் மானிய விலையில் எம்.ஜி.ஆர் பசுமை ஆட்டோ வழங்கும் திட்டம் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கில் படிப்படியாக மதுபான கடைகள் மூடப்படும்.

கியாஸ் சிலிண்டர்கள் 
கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலம் கடன்பெற்று வீடுகட்டியவர்களின் நிலுவைக்கடன் மற்றும் அடமானக் கடனை ஒரே தவணை என்ற அடிப்படையில் கடன் தொகையை செலுத்துபவர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். பெண் அரசு ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ப்பை கருத்தில் கொண்டு, பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மகப்பேறு விடுப்பு 9 மாத காலத்தில் இருந்து ஒரு வருடமாக உயர்த்தப்படும். குடும்ப தலைவிக்கு ரூ.1,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். எல்லா வீடுகளுக்கும் வா‌ஷின்மி‌ஷின் வழங்கப்படும். அரிசி, கோதுமை, சர்க்கரை 
போன்றவை வீடு தேடி வரும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆசை படி அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது. ஜெயலலிதாவின் ஆசைப்படி 100 ஆண்டுகாலம் அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் தொடர, இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வர இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story