கோவில்பட்டியில்
கோவில்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை டிரைவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு நேற்று உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுநர்கள் திரண்டு வந்தனர். மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் வேல்முருகன், மாவட்ட துணைச்செயலாளர் செந்தாமரைக்கண்ணன், மாவட்ட இணைச்செயலாளர் பாண்டி குமார் மற்றும் ஓட்டுநர்கள் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நாலாட்டின்புதூர் முதல் கழுகுமலை வரையிலுள்ள சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.பின்னர் அலுவலக கண்காணிப்பாளர் காளிதாசனிடம் வழங்கிய மனுவில், "நாலாட்டின்புதூர் முதல் கழுகுமலை வரையிலான 18 கி.மீ. சாலையில் 23 வேகத் தடைகள் உள்ளன. இதில், சங்கரலிங்கபுரம், காலாங்கரைப்பட்டி, கெச்சிலாபுரம் ஆகிய கிராம விலக்கு பகுதிகளில் உள்ள வேகத்தடைகள் குறித்து சாலையோரம் எச்சரிக்கை பலகை அமைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் புதிய வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது. கடந்த வாரம் வேகத்தடை அமைக்கப்பட்டு இருப்பது தெரியாமல் வந்த வேன் கவிழ்ந்து பயணிகள் காயமடைந்த சம்பவமும் நடந்துள்ளது. எனவே வேகத்தடைகள் இருப்பது குறித்து எச்சரிக்கை பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டு இருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட அவர் கோட்ட உதவி பொறியாளரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story