பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பங்குனி உத்திர திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பழனி:
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 28-ந்தேதி பங்குனி தேரோட்டம் நடைபெறுகிறது. அப்போது அடிவாரம் மற்றும் கிரி வீதிகளில் தேர் வலம் வரும்.
இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. மேலும் கிரி வீதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு மலைக்கோவிலுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, காவடி எடுத்து வரும் பக்தர்கள் சிரமமடைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையில் நேற்று பழனி அடிவாரம் மற்றும் கிரிவீதி பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் கடைகள் வைத்தால் கோவில் நிர்வாகம் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடைக்காரர்களை துணை ஆணையர் எச்சரித்தார்.
Related Tags :
Next Story